பீப் பாடல் விவகாரம் சிம்பு ஆஜராக கெடு: ஜனவரி 29

download (33)

இசையமைப்பாளர் அனிருத் இசையில் நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து, பெண்களிடம் கடும் எதிர்ப்பை கிளப்பியது. தமிழகம் முழுவதும் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் உருவ பொம்மை எரிப்பு சம்பவங்களும் நடந்தது.

மேலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் தமிழ்நாடு பால் முகவர்கள் நல சங்க தலைவர் பொன்னுசாமி, கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் போலீசில், அம்மாவட்ட  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் செயலாளர் ராதிகா ஆகியோர் சிம்பு நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்தனர்.  இந்த 2 புகார்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, இந்த 2 வழக்குகளிலும் முன்ஜாமீன் வழங்கக்கோரி சிம்பு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜேந்திரன், சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து சிம்பு முன்ஜாமீன் பெறலாம். ஜனவரி 11ம் தேதி அவர் 2 வழக்குகளிலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு (சைபர் கிரைம்) போலீசில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், சிம்புவின் முன் ஜாமீன் மனு மீது வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிம்பு நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக வேண்டும். ஆனால், நேற்று சிம்பு மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகவில்லை. அவர் ஆஜராக கால அவகாசம் கேட்டு அவரது சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசில் ஆஜராக கால அவகாசம் தருமாறு நீதிபதியிடம் சிம்புவின் வக்கீல் கோரினார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசிலும், கோவை ரேஸ்கோர்ஸ் போலீசிலும் மனுதாரர் சிம்பு ஜனவரி 29ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.