பெற்ற பிள்ளைகளுக்கு காதில் குறையிருந்ததால் மனமுடைந்து பிள்ளைகளோடு தற்கொலை

201601102140309300_In-the-hearing-impairedIf-you-had-a-daughter-son-and_SECVPF

உடுமலையில் காது கேட்பதில் குறைபாடு இருந்ததால் தனது மகள், மகனை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் ரோட்டில் இந்திரா நகர் அருகே உள்ள ஆமந்தகடவுக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). இவர் தனக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் பரப்பளவுள்ள தோட்டத்தில், விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி கலைச்செல்வி (34). இவர்களுடைய மூத்த மகள் கவிபிரபா (12). உடுமலை அருகே தாராபுரம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருகிறாள்.

2–வது மகள் நவீனா(8). அதே பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தாள். செல்வராஜ் தனது தோட்டத்துக்குள்ளேயே பண்ணை வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். தோட்டத்துக்கு அருகிலேயே செல்வராஜின் பெற்றோர் குடியிருந்து வருகிறார்கள்.

நவீனாவுக்கு பிறந்தபோதே காது கேட்பதில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. சரிவர காது கேட்காததால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் நவீனாவுக்கு நவீன முறையில் அதிக செலவு செய்து காதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன் கலைச்செல்விக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் கணவன்–மனைவி இருவரும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். தாங்கள் எண்ணியது நிறைவேறியதால் குலதெய்வ கோவிலுக்கு சென்று தனது மகனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மொட்டை அடித்து வழிபட்டனர். மகனுக்கு ‘குகன்’ என்று பெயர் வைத்தனர்.

மகனை குகன் என்று செல்லமாக பெயர் சொல்லி அழைக்கும்போது சிறுவன் திரும்பி பார்க்காமல் இருந்துள்ளான். இதனால் தனது 2–வது மகளை போலவே, குகனுக்கும் காதில் கோளாறு ஏற்பட்டு இருக்குமோ? என்று கலைச்செல்வி பதறினார். உடனடியாக இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த 8–ந் தேதி கணவன்–மனைவி இருவரும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று குகனை பரிசோதனை செய்தனர். அப்போது டாக்டர், குகனுக்கு காது கேட்பதில் குறைபாடு இருப்பதை உறுதி செய்தார். இதை கேட்ட கணவன்–மனைவி இருவரும் மனம் உடைந்தனர்.

குகனுக்கு காதில் கோளாறு இருக்கிறது என்று டாக்டர் கூறியதில் இருந்தே தலையில் இடி விழுந்ததைப்போல் உணர்ந்த கலைச்செல்வி மிகவும் சோகமாக காணப்பட்டார். மனைவியின் நிலைமையை பார்த்த செல்வராஜ், அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார். நேற்று முன்தினம் நள்ளிரவு கலைச்செல்வி தனது மகனுடன் இருந்தார். செல்வராஜ் படுக்கை அறைக்கு தூங்க சென்று விட்டார்.

நேற்று காலை செல்வராஜ் எழுந்து பார்த்தபோது வீட்டில் மூத்த மகள் கவிபிரபா மட்டும் தூங்கிக்கொண்டு இருந்தார். மனைவி கலைச்செல்வி, மகள் நவீனா, மகன் குகன் ஆகியோரை காணவில்லை. உடனே செல்வராஜ் வீட்டுக்கு வெளியே சென்று அவர்களை தேடி பார்ப்பதற்காக கதவை திறக்க முயன்றார். ஆனால் கதவு வெளிப்புறமாக பூட்டு போட்டு பூட்டப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ், செல்போன் மூலமாக அருகே உள்ள தனது தாயாரிடம் தகவல் தெரிவித்தார். அவருடைய தாயாரும் செல்வராஜ் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு முன் கிடந்த சாவியை எடுத்து கதவை திறந்து விட்டார். ஏதோ விபரீதம் நடந்துள்ளதை உணர்ந்த செல்வராஜ் தோட்டத்துக்குள் ஓடிச்சென்று தேடினார். சம்பவம் பற்றி அறிந்ததும் செல்வராஜின் உறவினர்களுக்கும் தோட்டத்துக்குள் சென்று கலைச்செல்வி மற்றும் குழந்தைகளை தேடினார்கள்.

வீட்டுக்கு அருகே உள்ள கிணற்று பக்கம் சென்று பார்த்தபோது, கலைச்செல்வியின் செருப்பு கிடந்தது. இதனால் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து இருக்கலாமோ? என்று சந்தேகம் அடைந்த செல்வராஜ் உடனடியாக உடுமலை போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, சப்–இன்ஸ்பெக்டர் ஜவகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். தீயணைப்பு நிலைய அதிகாரி நாகராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடினார்கள்.

சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் 30 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்தது. தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கி தீவிரமாக தேடினார்கள். அப்போது கிணற்றுக்குள் இருந்து சிறுமி நவீனாவின் உடலை தீயணைப்பு வீரர்கள் முதலில் வெளியே கொண்டு வந்தனர். சிறுமியின் இடுப்பில் கயிற்றால் கல் சேர்த்து கட்டப்பட்டு இருந்தது. 2–வதாக போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை குகனின் உடலை மீட்டனர்.

அதன்பிறகு கலைச்செல்வியின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். கலைச்செல்வியின் இடுப்பிலும் பெரிய கல் வைத்து கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. 3 பேரின் உடலையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 3 பேரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

உடுமலை போலீசார் நடத்திய விசாரணையில், நவீனாவை தொடர்ந்து தனது ஆசை மகன் குகனுக்கும் காதில் கோளாறு ஏற்பட்டு விட்டதே என்று மனமுடைந்த கலைச்செல்வி, குறையோடு இருப்பதை விட அவர்கள் சாவதே மேல் என்று நினைத்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி சிறுமி நவீனாவின் இடுப்பில் கல் வைத்து கயிற்றால் கட்டி அவரை கிணற்றுக்குள் தள்ளி விட்டுள்ளார். அதன்பிறகு தனது இடுப்பிலும் கல் வைத்து கயிற்றால் கட்டிக்கொண்டு, போர்வைக்குள் சுருட்டி வைத்திருந்த தனது மகன் குகனுடன் கலைச்செல்வி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காது கேட்பதில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.