ஜெயலலிதாவின் வாட்ஸ் அப் உரைக்கு 50 கோடி செலவா?

jayalalithacm

ராமதாஸ் கூறியுள்ளபடி ஜெயலலிதாவின் ’வாட்ஸ் ஆப்’ உரைக்கு ரூ.50 கோடி செலவாகவில்லை என்றும் ரூ. 3 கோடிக்கும் குறைவாகவே செலவாகியுள்ளது என்றும் அரசு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘ஜெயலலிதாவின் வாட்ஸ்-அப் உரை பிரச்சாரத்தை தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறைதான் மேற்கொண்டு வருகிறது.

நோய்டாவில் உள்ள அழைப்பு மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த பிரச்சாரத்திற்கு மட்டும் ரூ.50 கோடிக்கும் அதிகமான தொகை செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இது முழுக்க முழுக்க மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதனை அரசு அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘’தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப உலகில் தொலைபேசி இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்ற நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல், நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதா தொலைபேசியில் உரையாற்றினார்.

இதற்கு செலவான தொகை ரூ.3 கோடி என்று அரசாணையிலேயே கூறப்பட்டுள்ளது. ஆனால், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சமுதாய கடமையை நன்றாக புரிந்த பல தொலைபேசி நிறுவனங்கள் இதற்கு சலுகை வழங்க முன்வந்தன.

ஒரு தொலைபேசி நிறுவனம் 70 சதவீதம் வரை சலுகை அளித்தது. ஆக, அரசாணையில் தெரிவிக்கப்பட்ட ரூ.3 கோடி என்பதைவிட குறைவாகவே செலவானது. ரூ.50 கோடி செலவு செய்யப்பட்டதாக கூறுவது நிச்சயமாக சரியான தகவல் அல்ல’’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.