பேரறிவாளனை பொங்கலுக்கு முன் விடுதலை செய்ய வேண்டும் – முதல்வருக்கு மனு

perarivalan

நன்னடத்தை காரணமாக, தன் மகன் பேரறிவாளனை பொங்கலுக்கு முன் விடுதலை செய்ய வேண்டும் என்று அவரின் தாயார் அற்புதம் அம்மாள் இன்று முதல்வர் அலுவலகத்தின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையக குறைக்கப்பட்டு அவர்கள் சிறையில் 25 வருடங்களுக்கும் மேல் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் தமிழக அரசின் தீர்மானத்தை எதிர்த்து மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய புலனாய்வு துறை விசாரித்த வழக்கில், குற்றவாளிகளை விடுவிப்பதற்கு மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது என சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், பேரறிவாளின் தாயார் அற்புதம் அம்மாள் இன்று முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போது “என் மகன் 25 வருடங்களாக சிறையில் இருந்துவிட்டான். வரும் பொங்கலுக்காவது அவன் என்னுடன் இருப்பான் என்ற நம்பிக்கையில், முதலமைச்சரிடம் மனு அளிக்க வந்தேன்” என்று கண்ணீர் மல்க கூறினார்.

மேலும், ராஜிவ்காந்தி வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி தியாகராஜன், பேரறிவாளனின் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்துவிட்டேன் என்று கூறியதை சுட்டிகாட்டிய அவர், என் மகன் சட்டப் பிரிவு 161 வின் படி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், பேரறிவாளனின் நன்னடத்தை பற்றி சிறை அதிகாரிகள் அளித்துள்ள அறிக்கையை கணக்கில் கொண்டும், அவர் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் தன் மகனை விடுவிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published.