‘எழுச்சி தமிழகம்’ புதிய இயக்கம் தொடக்கம்: சகாயத்தை அரசியலுக்கு அழைக்கும் முகநூல் இளைஞர்கள்

Tamil_News_large_1101729

மதுரையில் நேற்று நடந்த மாநாட்டில் ‘எழுச்சி தமிழகம்’ என்ற புதிய இயக்கம் தொடங்கிய முகநூல் இளைஞர்கள், ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயத்தை அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்.

தமிழக இளைஞர்கள் ‘பேஸ்புக்’, ‘வாட்ஸ் அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் சமீப காலமாக ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை அரசியலுக்கு வரும்படி அழைத்த வண்ணம் உள்ளனர். இந்த இளைஞர்கள், தற்போது ஒரு இயக்கமாகச் செயல்பட்டு சமீபத்தில் சென்னையில் பேரணி நடத்தி, அரசியலுக்கு வரும்படி சகாயத்துக்கு பகிரங்க அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து, மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை அரசியலுக்கு அழைக்கும் கோரிக்கையுடன், இளைஞர் எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் உமர் முக்தர், பெலிக்ஸ் ராஜ்குமார், ராஜேஷ், ஜெகசண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் தமிழகம் மட்டுமில்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழக இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் இலவசம் எனும் பெயரில் மக்களை ஏழ்மையாக்கும் திட்டங்களை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும், ஆற்று மணல், கிரானைட், வன வளம் உள்ளிட்ட இயற்கை கனிம வளங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் போக்கை நிறுத்த வேண்டும். அரசே, மதுக்கடைகளைத் திறந்து சமுதாயத்தை சீர்குலைக்கும் செயலை கண்டிப்பது, தமிழக மக்களின் வருமானத்தை உறிஞ்சும் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது. காவிரி, குண்டாறு, வைகை நதிகளை உடனடியாக இணைக்க வேண்டும், தமிழ்மொழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வது அரசின் அனைத்து திட்டங்களும் எல்லா மக்களும் அறியும் வண்ணம் வெளிப்படையாக இணையதளத்தில் அறிவிப்பது மக்களுடைய ஒப்புதலைப் பெற்றபிறகே அந்த திட்டங்களை நிறைவேற்றுவது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுபற்றி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் பேசியதாவது:

தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்பவும், தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை அழைக்கிறோம். அதற்காக மதுரையில் ‘எழுச்சி தமிழகம்’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி உள்ளோம். மாவட்டங்கள் தோறும், விரைவில் நிர்வாகிகளை நியமிக்க உள்ளோம். இந்த மாநாடு ஒரு தொடக்கம்தான். தெருத்தெருவாக, வீடு, வீடாகச் சென்று எங்களுடைய இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட உள்ளோம். எங்களுடைய இயக்கம் நிச்சயம் தமிழக அரசியலை தூய்மைப்படுத்தும். மக்களின் கஷ்டம் தெரியாதவர்கள் அரசியலுக்கு இனியும் வரக்கூடாது. ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் பேச்சு, செயல்பாடு இளைஞர்களிடையே புதிய எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து எல்லா மாவட்டத்திலும் இதுபோன்ற மாநாடுகளை நடத்த உள்ளோம். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ளன. இந்த 5 மாதங்களுக்கு, இளைஞர்கள் தங்களுடைய சொந்த வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட மக்களிடம் மாற்றத்துக்கான எண்ணத்தை ஏற்படச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாநாட்டில் பங்கேற்றவர்கள் கருத்து: ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னியில் பணிபுரியும் திருச்சியைச் சேர்ந்த ராகுல், (28) கிருத்திக், (28) ஆகியோர் கூறுகையில், “பேஸ்புக் அழைப்பு மூலம் தகவலறிந்து இந்த மாநாட்டில் பங்கேற்க வந்தோம். ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நேர்மையானவர். இளைஞர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி. அவரை முன்னிலைப்படுத்துவதால் இந்த மாநாட்டில் பங்கேற்க வந்தோம். அரசியல் சாக்கடை என்று கூறி இளைஞர்களை வர விடாமல் தடுக்கின்றனர். அந்த சாக்கடையை சுத்தம் செய்ய சரியான தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது, ” என்றனர்.

கொடைக்கானலைச் சேர்ந்த சிவில் இன்ஜினியரிங் படித்த ஆர்த்தி (22) கூறுகையில், “தற்போது மக்களுக்கான அரசியல் தலைவர்கள் இல்லை. இலவசங்களை கொடுத்தே இந்த அரசுகள் கண்களை கட்டிவிட்ட உலகத்தில் வசிக்க வைத்துவிட்டனர். படித்தவர்கள் அரசியலுக்கு வரவே தயங்குகின்றனர். என்னைப் போன்ற படித்த மாணவிகளும் அரசியலுக்கு வர வேண்டும். குறைந்தபட்சம் ஆதரவாவது கொடுக்க வேண்டும் என்பதற்காக வந்தேன், ” என்றார்.

வழக்கறிஞர் ஜோதிராமலிங்கம் (65) கூறுகையில், எல்லோருக்கும் உதவக் கூடிய அரசு அமைய வேண்டும். அந்த மாற்றம் இளைஞர்கள் மூலம் மட்டுமே சாத்தியம். இந்த எண்ணம் ஒவ்வொருவரின் எண்ணத்திலும் இருக்கும். ஆனால், ஒன்றுகூட மாட்டார்கள். அரசியல் களத்துக்கு வர மாட்டார்கள். இப்போது ஒன்றுகூட தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது மூத்தோர்களுடைய கடமை. அதனால் வந்தேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.