ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்காவிட்டால் கருணாநிதி அனுமதியை பெற்று விரைவில் போராட்டம் மு.க.ஸ்டாலின் மீண்டும் அறிவிப்பு

download (21)

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்காவிட்டால், கருணாநிதி அனுமதியை பெற்று விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் மீண்டும் அறிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் சந்தித்து நேற்று புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். தமிழக மக்கள் விரும்பும், தமிழக மக்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என்ற நம்பிக்கை புத்தாண்டு தினத்தில் பிறந்துள்ளது.  கடந்த நான்கரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் செயலற்ற, ஊழல் மிகுந்த இந்த ஆட்சிக்கு முடிவு கட்டக்கூடிய வகையில் தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பாக கடமையாற்றி வருகிறார்கள்.

நான் என்ற ஆணவத்தோடு, என் கண்ணுக்கு எட்டிய வரை எதிரிகளே தெரியவில்லை என பேசிவந்த ஜெயலலிதா இப்போது சட்டமன்ற தேர்தலின் போது சூழ்நிலைக்கு ஏற்ப வியூகம் வகுக்கப்படும் என சொல்லியிருப்பது, அ.தி.மு.க.விற்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.  ஜனவரி முதல் வாரத்திலிருந்து தொடங்கவுள்ள ‘‘நமக்கு நாமே’’ பயணம் மீதமுள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் பிப்ரவரி மாத இறுதிவரை நடைபெற உள்ளது.  நமக்கு நாமே பயணத்திட்டம் பொதுமக்களை மட்டுமின்றி ஜெயலலிதாவையும் கவர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறந்து விடப்பட்டது தொடர்பாக பல விளக்கங்களை அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசியபோது தெரிவித்துள்ள ஜெயலலிதா, அதுகுறித்து நீதி விசாரணை நடத்த தயாரா என்று தெரிவிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்காவிட்டால் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அனுமதியை பெற்று விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மதுரையில் கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி தனது தலைமையில் ஜல்லிக்கட்டு அனுமதிக்காக போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் என்று உத்தரவாதம் அளித்ததையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஜல்லிக்கட்டுக்காக மு.க.ஸ்டாலின் போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டையொட்டி, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தின் முன்பு நேற்று அதிகாலை முதல் திரண்டனர்.  தி.மு.க.வினரின் புத்தாண்டு வாழ்த்துகளை கருணாநிதி காலை 10 மணி முதல் பெற்றுக்கொண்டார்.

துணைவியார் ராஜாத்தி அம்மையார், கருணாநிதி மகன் மு.க.தமிழரசு, மகள்கள் செல்வி, கனிமொழி எம்.பி., தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, எஸ்.பி.சற்குணபாண்டியன், முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, எஸ்.ஜெகத்ரட்சகன், எஸ்.எஸ்.பழனிமாணிக் கம், கருணாநிதியின் செயலாளர்கள் கோ.சண்முகநாதன், கே.ராஜமாணிக்கம், எஸ்.ராஜ ரத்தினம், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பூங்கோதை ஆலடி அருணா, புலவர் இந்திரகுமாரி, வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மாணவர் அணி துணை செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரி சங்கர், நடிகர் வாகை சந்திரசேகர், மாநில பிரசார குழு செயலாளர் வக்கீல் சிம்லா முத்துச்சோழன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்து தெரிவித்தனர்.

கவிஞர் வைரமுத்து, தமிழக காங்கிரஸ் கட்சி ஊடக தலைவர் கோபண்ணா, சிறுபான்மை சமூக புரட்சி இயக்க தலைவர் கா.லியாகத் அலிகான் உள்ளிட்டோரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.