ஐ.பி.எல். கிரிக்கெட்: யுவராஜ்சிங்கை கழற்றி விட்டது டெல்லி அணி ஸ்டெயின், மேத்யூசும் விடுவிக்கப்பட்டனர்

07-1428410449-yuvraj-singh45-600

இந்திய அணியின் ஆல்–ரவுண்டர் யுவராஜ்சிங்கை, கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியின் போது ரூ.16 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் ஏலத்தில் எடுத்தது. ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் இவர் தான். ஆனால் 8–வது ஐ.பி.எல். தொடரில் யுவராஜ்சிங்கின் செயல்பாடு எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை. 14 ஆட்டங்களில் வெறும் 248 ரன்கள் மட்டுமே (சராசரி 19.07) எடுத்தார்.

இந்த நிலையில் 9–வது ஐ.பி.எல். போட்டியை யொட்டி பரஸ்பரம் அடிப்படையில் முதற்கட்ட வீரர்கள் பரிமாற்றம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதன் அடிப்படையில் யுவராஜ்சிங்கை தங்கள் அணியில் இருந்து டெல்லி டேர்டெவில்ஸ் நிர்வாகம் அதிரடியாக கழற்றி விட்டுள்ளது. இது குறித்து டெல்லி அணியின் தலைமை செயல் அதிகாரி ஹேமந்த் துவா கூறும்போது, ‘யுவராஜ்சிங் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவர் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார். ஆனால் எங்களது பட்ஜெட்டை கருத்தில் கொண்டே அவரை விடுவித்துள்ளோம். தனிப்பட்ட முறையில் அவரிடம் பேசினேன். அவர் பெரிய அளவில் வேதனைப்படவில்லை. இலங்கை வீரர் மேத்யூசையும் (ரூ.7½ கோடி) விடுத்து இருக்கிறோம். இதனால் எங்களுக்கு ரூ.23 கோடி மிச்சம் (இந்த தொகையை அடுத்த ஏலத்தில் பயன்படுத்தலாம்) ஆகியிருக்கிறது.’ என்றார்.

இதே போல் ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் பெய்லி (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), இந்தியாவின் தினேஷ் கார்த்திக், வெஸ்ட் இண்டீசின் டேரன் சேமி (இருவரும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்), இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின், இந்தியாவின் இஷாந்த் ஷர்மா (மூன்று பேரும் ஐதராபாத் சன் ரைசர்ஸ்), இந்தியாவின் பிரக்யான் ஓஜா, ஆஸ்திரேலியாவின் ஹாஸ்லேவுட், ஆரோன் பிஞ்ச் (மும்பை இந்தியன்ஸ்) உள்ளிட்டோரும் தங்களது அணி நிர்வாகங்களால் விலக்கப்பட்டுள்ளனர்.

மொத்தத்தில் பெங்களூரு அணி 14 வீரர்களையும், டெல்லி, மும்பை, கொல்கத்தா தலா 10 வீரர்களையும், பஞ்சாப், ஐதராபாத் தலா 8 வீரர்களையும் விடுவித்துள்ளது. இவர்கள் பிப்ரவரி மாதம் நடக்கும் ஏலப்பட்டியலில் இடம் பெறுவார்கள். விராட் கோலி (பெங்களூரு), கம்பீர் (கொல்கத்தா), ரோகித் சர்மா (மும்பை), வார்னர் (ஐதராபாத்), டுமினி (டெல்லி), மேக்ஸ்வெல் (பஞ்சாப்) உள்ளிட்டோர் தங்களது அணிகளில் தொடருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.