புத்தாண்டு கொண்டத்திற்கு மாநகர காவல் ஆணையர் விதித்துள்ள கட்டுப்பாடுகள்

download (6)

இன்று இரவு ஆங்கிலப் புத்தாண்டை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கொண்டாட உள்ளார்கள். இந்த கொண்டாட்டம் இந்தியாவிலும், சென்னையிலும் மெரினா, பெசண்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் பெருவாரியான மக்கள் திரண்டு புத்தாண்டை கொண்டாடுவர்.

இந்நிகழ்ச்சியின்போது சில எதிர்பாராத விபத்துகள், மோதல்கள் உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களும் நடைபெறுவது உண்டு. இதனை தடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

அது குறித்த விவரம் பின்வருமாறு:

பொழுதுபோக்கு இடங்களில் 31-ந் தேதி (இன்று) மாலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மட்டும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதிக்கப்படும். நள்ளிரவு 1 மணியுடன் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் மதுபான விற்பனை மற்றும் உணவு விற்பனையை நிறுத்திக்கொண்டு கொண்டாட்டங்களையும் கண்டிப்பாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நடக்கும் இடங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வரும் வாகனங்களை நுழைவுவாயிலில் நிறுத்தி உரிய சோதனை நடத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே மது வகைகளை பரிமாற வேண்டும்.

நீச்சல் குளங்களின் மீது மேடை அமைத்து புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்த கூடாது. நீச்சல் குளங்களை 31-ந் தேதியன்று மாலை 6 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6 மணி வரை மூடிவிட வேண்டும்.

மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். மது அருந்தி விட்டு வாகனங்களில் செல்பவர்கள் மது அருந்தாத சிறப்பு டிரைவர்களை வாகனங்களை ஓட்டுவதற்கு பணியமர்த்த வேண்டும். குடிபோதையில் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக புத்தாண்டு கொண்டாட்டங்களிலிருந்து வெளியேற்ற வேண்டும். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுபவர் மீது கடுமையான சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும்.

இரண்டு சக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் செல்லக்கூடாது. இரண்டு சக்கர வாகனங்களை அதிவேகமாகவும் ஓட்டிச் செல்லக்கூடாது. புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் மெரினா மற்றும் எலியட்ஸ் பீச் போன்ற இடங்களில் கடலில் குளிக்க அனுமதி இல்லை. கடல் ஓரமாக செல்வதற்கு கூட அனுமதிக்கப்பட மாட்டார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கடலில் உல்லாசமாக படகு சவாரி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெண்களை கிண்டல் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது. பெண்கள் மற்றும் பிறர் மீது வண்ணப்பொடிகளை தூவுதல், சாயத்தண்ணீரை பீய்ச்சி அடித்தல் போன்றவற்றுக்கும் அனுமதி இல்லை. சென்னையில் முக்கியமான சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன சோதனையும் நடத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published.