காங்கிரஸின் துவக்க நாள் விழாவில் காங்கிரஸ் தலைவர்களைப் பற்றி கட்சி நாளிதழிலேயே விமர்சனம்

Congress-Hand

காங்கிரஸ் கட்சியில் 131-வது தொடக்கநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கட்சியின் நாளிதழில் வெளியிடப்பட்டு உள்ள கட்டுரையில் சர்தார் பட்டேல் பராட்டப்பட்டு, முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் இப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சிக்கப்பட்டு உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மும்பை பிராந்தியத்தால் பிரசுரிக்கப்பட்டு உள்ள கட்டுரையில் காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஜவர்கலால் நேரு விமர்சிக்கப்பட்டு உள்ளார். கட்டுரையில் ஜவர்கலால் நேரு சர்வதேச விவகாரங்களில் சர்தார் வல்லபாய் படேலின் கருத்துக்களை கேட்டிருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 1997-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக சேர்ந்த சோனியா காந்தி 62 நாட்களில் கட்சியின் தலைவராக ஆகிவிட்டார், அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியிலும் தோல்வி அடைந்துவிட்டார் என்றும் மற்றொரு கட்டுரையில் விமர்சிக்கப்பட்டு உள்ளார். இம்மாத இதழில் வெளியாகிய கட்டுரையில் யார் எழுதியது என்பது குறுப்பிடப்படவில்லை. முன்னாள் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் நினைவு தினம் கடந்த டிசம்பர் 15-ம் தேதி அன்று அனுசரிக்கப்பட்டது. இதழில் அவருக்கு அஞ்சலி தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“பட்டேல் துணை பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி பதவிகளை வகித்தாலும், இரு தலைவர்கள் இடையிலான உறவானது பலவீனமாகவே தொடர்ந்தது, இதனால் ராஜினாமா எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.” என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. பட்டேல் அவர்களின் தொலைநோக்கு பார்வையை நேரு அவர்கள் தழுவியிருந்தால், சர்வதேச விவகாரங்களில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து இருக்காது. கடந்த 1950-ம் ஆண்டு திபெத் விவகாரத்தில் சீனாவிற்கு எதிரான கொள்கையில் நேருவுக்கு பட்டேல் எழுதியதாக கூறப்படும் எச்சரிக்கை கடிதத்தை குறிப்பிட்டு ”பட்டேல் சீனாவை நம்பமுடியாத நாடு என்றும் இந்தியாவின் பிற்கால எதிரியாக இருக்கும் என்று விமர்சித்து இருந்தார்,” என்று கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீர், சீனா, திபெத் மற்று நேபாளம் ஆகிய விவகாரங்களில் ஜவகர்லால் நேரு, பட்டேல் பேச்சை கேட்டிருந்தால் பிரச்சனையானது இப்போதுவரையில் நீண்டிருக்காது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.விற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற நேருவின் நடவடிக்கைக்கு பட்டேல் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் என்றும் நேபாளம் விவகாரத்தில் நேரு, பட்டேல் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மும்பை பிராந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும், காங்கிரஸ் கட்சி பத்திரிக்கையின் ஆசிரியருமான சஞ்சய் நிருபம் பேசுகையில் பத்திரிக்கையின் ஒவ்வொரு நாள் நடவடிக்கையிலும் தான் ஈடுபடுவது கிடையாது என்றும் இதுதொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.