திருச்சியில் மேலும் ஒரு கட்டிட விபத்து

50299333

ஸ்ரீரங்கத்தில், கட்டடப் பணி நடந்த இடம் அருகே இருந்த, பழமையான வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில், கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேர், பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி, ஸ்ரீரங்கம் மேல உத்திர வீதியில் வசிப்பவர் சம்பத்குமார்; ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது வீட்டை ஒட்டியுள்ள இடத்தை, ரங்காராவ் என்பவர் விலைக்கு வாங்கி, அங்கு கட்டடம் கட்டி வருகிறார்.நேற்று காலை, அந்த இடத்தில் கான்கிரீட் போடும் பணி நடந்தது. நான்கு பெண் கட்டட தொழிலாளர்கள் உட்பட, 15 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று பிற்பகல், 2:30 மணிக்கு, அந்த இடத்தை ஒட்டியுள்ள சம்பத் குமார் வீட்டின், 25 அடி நீளமுள்ள பக்கவாட்டு சுவர், திடீரென இடிந்து விழுந்தது.இதில், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த, நான்கு பெண்கள் தவிர, 11 பேர் இடிந்து விழுந்த சுவரின் இடிபாடுகளில் சிக்கி, அபயக்குரல் எழுப்பினர். இதை கேட்ட அக்கம்பக்கத்தார், உடனடியாக, ஸ்ரீரங்கம் போலீசாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். துரிதமாக நடைபெற்ற மீட்புப் பணியால், இடிந்த சுவரின் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்கள், சிறிது நேர இடைவெளியில் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம், ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.கட்டுமானப் பணியின் மேற்பார்வை இன்ஜினியர் ரங்கநாதன், 27, என்பவர் மட்டும் சடலமாக மீட்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், 40 – 50 வயதுடைய மூவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.இடிந்த கட்டடத்தின் உரிமையாளர் மகன் சவுமியா நாராயணனும், 40, படுகாயமடைந்து, ஸ்ரீரங்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

படுகாயத்துடன் மீட்கப்பட்ட ஐந்து பேர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.