நடக்குமா ஜல்லிக்கட்டு தமிழகத்தில் ?

25-jallikattu-300

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள் நெருங்கிவரும் நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு வழிசெய்யும் வகையில் சட்டத்தை திருத்தவோ, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவோ வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரியிருக்கிறார்.

இது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் பொங்கல் திருநாள் நெருங்குவதால், அதையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று தமிழக மக்கள் கருதுவதாகக் கூறியுள்ளார்.

1960ஆம் ஆண்டின் மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் உள்ள காட்சிப்படுத்தக்கூடாத, வித்தைகாட்டக்கூடாத மிருகங்களின் பட்டியலில் கரடி, புலி, சிறுத்தை, சிங்கம் ஆகியவற்றோடு காளையும் இணைக்கப்பட்டிருக்கிறது.

2011ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின் மூலம் இது செய்யப்பட்டது. 2014ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி அளித்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றமும் இந்தத் திருத்தத்தை உறுதிசெய்தது. இதையடுத்து, காளைகளை ஜல்லிக்கட்டிற்குப் பயன்படுத்தக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தற்போது அந்த மனு நிலுவையில் இருக்கிறது.  காளைகளை ஜல்லிக்கட்டிற்குப் பயன்படுத்தக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற திர்ப்பை எதிர்க்கும் தமிழக அரசின் சீராய்வு மனு நிலுவையில் இருக்கிறது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தத் தேவையான சட்டத்திருத்தத்தை கொண்டுவரும்படி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிவருவதாகவும் இது தொடர்பான சட்டம் தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்த்திருந்ததாகவும் ஜெயலலிதா தன் கடிதத்தில் கூறியிருக்கிறார். இருந்தபோதிலும், மாநிலங்களவையில் தற்போது நிலைவும் மோதல் போக்கின் காரணமாக, ஜல்லிக்கட்டு தொடர்பான மசோதாவை தற்போது அறிமுகப்படுத்த முடியவில்லை என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் கூறியிருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியாகியிருப்பதை ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இத்தகைய சூழலில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருகவதைத் தடுப்புச் சட்டத்தைத் திருத்தவோ, அல்லது வேறு ஏதாவது புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவோ செய்ய வேண்டுமென ஜெயலலிதா தனது கடிதத்தில் கோரியுள்ளார். ஜனவரியில் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டுமென்பதால், இதனை இந்தக் கூட்டத்தொடரிலேயே செய்ய வேண்டுமென்றும் இல்லாவிட்டால் சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தி அதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென ஜெயலலிதா கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.