பீப் பாடலை வெளிவிட்ட நபர் சிக்குகின்றார் இதனால் தப்பிப்பார்களா சிம்பு – அனிருத்

hqdefault (5)

சிம்பு பாடிய பீப் ஆபாச பாடலை வெளியிட்டது தொடர்பாக பிரபல கதாநாயகன் ஒருவர் சிக்குகிறார். அவர் மீது போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாச பாடல் எழுதி, பாடியதாக நடிகர் சிம்புவுக்கு எதிராகவும், இசையமைத்து இருப்பதாக கூறப்படும் அனிருத்துக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக போராட்டம் வலுத்து வருகிறது. சென்னை தி. நகரில் மாசிலா மணி தெருவில் உள்ள உள்ள சிம்பு வீட்டு முன் பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

சிம்பு, அனிருத்தின் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து சாணியால் அடித்தனர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது.

இதைத் தொடர்ந்து கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். ஆனால், இருவரும் நேரில் ஆஜராகவில்லை.

அவர்களுக்கு பதிலாக இருவரின் பெற்றோர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், நேரில் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது.

இதைத் தொடர்ந்து சென்னை சைபர் கிரைம் போலீசாரும் சிம்பு, அனிருத் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். இது அவர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

கைது நடவடிக்கை உறுதி என்ற நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் சிம்பு, அனிருத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

சில வழக்குகளில் இருவரும் முன் ஜாமீன் பெற்றனர்.

தாங்கள் பாடலை வெளியிடவில்லை. தங்களுக்கு வேண்டப்படாத யாரோ இதுபோன்று மோசடி வேலைகளில் இறங்கி விட்டனர் என சிம்பு, அவரது தந்தை டி. ராஜேந்தர் உருக்கமாக பேசினர்.

இதைத் தொடர்ந்து யூடியூப்பில் பாடலை வெளியிட்டது யார் என்ற விபரத்தை தெரிந்து கொள்வதற்காக மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயக்குமார் யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார். இதனால், குற்றவாளி விரைவில் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில், ஆபாச பாடலை வெளியிட்டதின் பின்னணி பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது.

பாடல் பாடப்பட்டு அதன் இணை அமைப்பு நிறைவடைந்த உடன் அனிருத் தனது பாடலை நட்பு ரீதியிலும், விளையாட்டு ரீதியிலும் வளர்ந்து வரும் பிரபலமான நடிகர் ஒருவருக்கு அனுப்பி உள்ளாராம். தற்போது நடித்துள்ள அனைத்து படங்களிலும் வெற்றி பதித்து வரும் மற்றும் பெண்கள், குழந்தைகள் மத்தியிலும் வரவேற்பை பெற்ற அந்த நடிகர் பாடலின் பாதிப்பு புரியாமலும், தன்மை தெரியாமலும் விளையாட்டுத்தனமாக அந்த பாடலை தனது நண்பர்கள் சிலருக்கு பகிர்ந்துள்ளார்.

அவர்கள் மற்ற நண்பர்களுக்கு பகிர, யூடியூப்பிலும் சிலர் பகிர்ந்துள்ளனர்.

அதன் பிறகு வாட்ஸ்அப், பேஸ் புக் என உலகம் முழுவதும் பாடல் பரப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தற்போது, போலீசாரின் கவனத்திற்கு சென்றுள்ளது. அவர்கள் சம்பந்தப்பட்ட கதாநாயகனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் பாடலை லீக் செய்து இருந்தால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பீப் பாடல் விவகாரத்தில் பிரபல நடிகர் சிக்கி இருப்பது தற்போது, திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.