விலைவாசியில் செலவைக் குறைக்க முத்தான வழிகள்

IMG_0842

 

இருக்கும் விலை வாசி ஏற்றத்தில் இப்போது வாழ்வதே போராட்டம் இதில் தேவைகளும் அதிகரித்து வருகின்றது.  ஆனால் பணம் மட்டும் கரைந்து கொண்டே இருக்கின்றது எங்கே நான் சம்பளம் வாங்கியது தெரியவில்லை உடனே போய்விடுகின்றது. என்று புலம்பும் குடும்பவான்கள் எல்லாம் பாவம் தான் அவர்களுக்காகவே இந்த பதிவு.

1. சமையல் எரிவாயு.

சமையலுக்கு எரிவாயு இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது கிராமத்தில் இருந்தால் காடுகளில் குச்சைப் பொறுக்கி எரிய விட்டு விடலாம் ஆனால் நகரத்தில் அதுவும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் என்ன தான் செய்வது.  வாயுவே கதி.. தினமும் பர்னரை கிளீன் செய்யவேண்டும்.  வாயகன்ற பாத்திரத்தை பயன்படுத்த வேண்டாம்.  குக்கர் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.  பற்ற வைக்கும் போது சிம்மில் வைத்து விட்டு பற்றவைக்க வெண்டும்.  அடிப்பாக அகலமாக ஜ்வாலைகள் முழுவதுமாக பாத்திரத்தில் படவேண்டும். மற்க்காமல் வேலை முடிந்தவுடன் ரெகுலேட்டரை மூடி விட வேண்டும்.  முடிந்த வரை இன்டக்சன் ஸ்டவினைப் பயன்படுத்துங்கள் 50 சதவீதம் மிச்சப்படுத்தலாம்.

2. உணவு

கிராமத்தில் ரேசன் அரிசி அல்லது வயலில் விளையும் அரிசிகளை பயன்படுத்துவார்கள். நம்மவர்களுக்கு அதெல்லாம் ஒத்துக்கொள்ளாது மல்லிகைப்பூ மாதிரி சோறு இருக்கணும் அப்படின்னா என்ன செய்ய மாதம் 2000 ரூபாய் கொடுத்து அரிசி வாங்க வேண்டும்.  இதற்கு குருணை அரிசி உபயோகிக்கலாம் விலையும் குறைவு சீக்கிரம் வெந்துவிடும். சீரணப் பிரச்சினைகள் இருக்காது உடனே செரித்து பசிக்கவும் செய்யும்.  தோசையை விட இட்லி செய்வது மேல் ஏனெனில் தோசை ஒன்று ஒன்றாக வார்த்து எடுக்க வேண்டும் எரிவாயு வேஸ்ட் ஆகிவிடும். ஆனால் இட்லியை 2 ஈடு உற்றிவைத்தாலே போதும்.  எரிவாயு மிச்சப்படுத்தலாம்

குழம்புக்கு காய்கறிகள் போட்டு தான் ஆகவேண்டும் அதில் செலவைக் குறைக்க முடியாது ஆனால் கூட இரசம் அல்லது தயிரை தாளிதம் செய்து வைத்துவிடுங்கள் காய்கறி செலவு சிறிது குறையும். தினமும் ஒரே மாதிரி சமைக்காமல் புளி, பருப்பு, மசாலா குழம்பு என்று மாற்றி வையுங்கள்.  கீரைகளை அதிகமாக சேருங்கள்.

கறிவேப்பிலை தினமும் வாங்காமல் கொத்தாக மார்க்கெட்டில் வாங்கி வந்து காயவைத்து பாட்டிலில் அடைத்து விடுங்கள்.

3. காய்கறிகள்

தினமும் காய்கறி வாங்குவது கடினம் தான்.  வழக்கமாக வாங்கும் காய்கறிக்காரர்களிடம் வாங்குங்கள்.  மாலில் போனீர்கள் என்றால் ஒரு லட்சம் சம்பாதித்தால் கூட வாங்க முடியாது.  காய்கனிகள் சாயங்கால வேளையில் வாங்கினால் நல்லது ஏனெனில் மாலையில் வியாபாரத்தை முடிந்த வரை செய்துவிட்டு வீட்டுக்கு வெறும் கூடையோடு போக வேண்டும் என்று நினைப்பார்கள் அதனால் உங்களது பேரம் செல்லும்.

4. வாகனங்கள்

பேருந்து கூட்ட நெரிசல் பிடிக்காதவர்கள் வாகனங்கள் ஓட்டும்போது பெட்ரோல் சிக்கனம் முக்கியம் பெருகி வரும் வாகனங்களால் பெட்ரோல் செலவும் அதிகரிக்கின்றது. சிக்னலில் வண்டியை ஆப் செய்து விடவும் முடிந்த வரை வண்டியில் அதிக பாரம் அல்லது நண்பர்களை ஏற்றிக் கொண்டு செல்லாதீர்கள் இதனால் பெட்ரோல் செலவு மிச்சமாகும். (நண்பர்களை பெட்ரோல் செலவில் பங்கிட சொல்லுங்கள் தயங்காமல்).  அதிக CC உள்ள பிரத்யேகமான பைக்குகள் நம் குடும்பத்திற்கு ஏற்றதில்லை.  பொதுவாக ஸ்கூட்டர் போன்றவைகள் குடும்பஸ்தர்களுக்கு ஏற்றது ஏனெனில் விட்டு சாமான்களை முன்னாடி வைத்துக் கொள்ளலாம்.  பெண்களும் ஒட்டலாம்.  மறக்கமால் லைசன்ஸ், தலைக்கவசம், இன்சூரன்ஸ் காப்பி, ஆர் சி புக் காப்பி, சாலைவிதிகளை மதித்தல் போன்றவைகள் ரொம்ப முக்கியம் இதெல்லாம் வாகனத்தில் இருக்கவேண்டும்.

5. தவறான பழக்க வழக்கங்கள்.

குருவி போல சேமித்து சேர்த்து வைத்தாலும் சூது, மது, மாது போன்ற தீய பழக்கவழக்கங்கள் இருந்தால் நான் சிக்கனமானவன் என்று வெளியே சொல்லாதீர்கள்.  ஒரு சொம்புப் பாலில் சிறிது பாம்பின் விசம் இருந்தாலும் அது  பால் என்றாகாது. நண்பர்களிடம் அளவாக பழகுங்கள். கடன் வாங்குவதை தவிர்க்கவும்.  தீய பழக்க வழக்கங்கள் இருந்தால் நீங்கள் செய்யும் தவறுக்கு ஒரு வினாடிக்கு முன்னர் குடும்பத்தை நினைத்துப்பாருங்கள் உங்களை நம்பி தான் அவர்கள். அருள் பிறக்கும்.

6. ஆசைகளை குறையுங்கள்.

ஆம் மிக முக்கியமானது நாம் இப்போது கவலைப்படாமல் இருக்கு வாழவில்லை. நம்மை நம்பியவர்கள் கவலைபடாமல் இருக்கத்தான் வாழ்கின்றோம். எனவே நமக்கான தேவைகளை குறைத்துக்கொள்ளுங்கள்  நமக்கு இது தேவையில்லை என்று தெரிந்தும் அதற்கு மேலும் அடைய ஆசைப்படாதீர்கள்.  நம் வீட்டு ஆசைகள் அநாவசியமானது என்று தெரிந்தால் புரிய வைக்க பாருங்கள் அதற்காக அதிகாரத்தை காட்டாமல் நிறைவேற்றிவிடுங்கள்.  பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை அவர்களைக் கூட்டிக்கொண்டு சென்று அவர்கள் கைகளிலே பணத்தை கொடுத்து வாங்கச்சொல்லுங்கள். அப்படி என்றால் தான் அவர்களுக்கும் பணத்தின் தேவை மற்றும் செலவுகள் தெரியும்.  நாம் வாழ்வதற்காக இனிமேல் இல்லை நம்மை சார்ந்தவர்கள் வாழ்வதற்காக தான் வாழ்கின்றோம் என்று எண்ணத்தை கொண்டுவாருங்கள்.

7. மின்சாரம்

வீட்டில் முக்கியமானது மின்சாரமும் தான் வீட்டில் மின்சாரத்தேவைகள் குறைக்கமுடியாது.  ஆனால் சில பழைய முறைகளை மாற்றலாம்.  வீட்டில் LED விளக்குகள், LED TV, BEE சான்றிதழ் கொடுக்கப்பட்ட மின் சாதனங்கள் போன்றவை மிக முக்கியமானது.  வாட்டர் ஹீட்டர், அயன் பாக்ஸ் போன்றவை அதிக மின்சாரம் ஏற்கும் தன்மையுடையது. முடிந்த வரை மின்னாற்றலை சேமியுங்கள்.  வீட்டில் இரவு நேரத்தில் அனைவரும் ஒரே ஒரு அறையில் தனது வேலைகளை செய்யலாம். இதனால் மற்ற அறைகளை விளக்குகள் தேவையில்லை.  பிள்ளைகள் படிக்க Table Lamp வாங்கி தரவும்.  மின்சாரத்தை பயன்படுத்தி செய்யும் அனைத்து வேலைகளும் அதிக கவனத்துடன் சிக்கனத்துடன் இருக்கவேண்டும்.

8. தொலைத்தொடர்பு

வீட்டில் பயன்படுத்தும் தொலைதொடர்பு சாதனங்கள் அனைத்தும் ஒரு நெட்வொர்க்கையே பயன்டுத்த வேண்டும். அந்த நெட்வொர்க்கில் கொடுக்கப்படும் சலுகைகளை விசாரித்துப் பயன்படுத்தலாம்.

9. சேமிப்பு

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்க முடியாதது மருத்துவச்செலவு தான் இந்த மருத்துவச் செலவுகளை தவிர்க்க தினமும் நல்ல தண்ணீர், நல்ல உணவு உடற்பயிற்சி செய்து வாழவேண்டும் அதே சமயம் திடீரென்று உருவாகும் மருத்துவச்செலவு ஏற்படத்தான் செய்கின்றது. இதனால் சேமிப்பு ரொம்ப முக்கியம் மாதம் தோறும் தவறாமல் சேமிக்க வேண்டும். சேமிப்பு மிக முக்கியமானது என்பதை குழந்தைகளுக்கும் உண்டியல் வாங்கிக் கொடுத்து தினமும் சேமிக்க அவர்களுக்கு சிறிய தொகை கொடுத்து பழக்கவேண்டும்.

10. வெளியில் சாப்பிடுவதை தவர்த்திடுங்கள்.

வெளியில் பார்ட்டி ஹோட்டல் மற்றும் பப்வே போன்றவற்றில் கலந்து கொள்ளாதீர்கள் வற்புறுத்தினாலும் செல்லாதீர்கள்.  தர்மம் செய்ய என்று சம்பளத்தில் ஒதுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதில் கஞ்சம் செய்யாதீர்கள்.  முன் கை நீண்டால் தான் புறங்கை நீளும்.  கடன் கொடுக்காதீர்கள் வாங்காதீர்கள் நண்பர்களுக்கு பணம் தேவைப்பட்டால் (தவிர்க்க முடியாத நிலையில்) தயங்காமல் உதவுங்கள். நாளைக்கு உங்களுக்கும் பணம் தேவைப்படும்.

 

Leave a Reply

Your email address will not be published.