நோய் எதிர்ப்புச் சக்தி பற்றிய தகவல்கள்

immunity

பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நாம் உள்ளே இழுக்கின்ற மூச்சுக்காற்றின் வழியாகவும், குடிக்கும் தண்ணீரின் வழியாகவும், சாப்பிடும் உணவிலிருந்தும், தோலில் ஏற்படும் வெடிப்புகளிலும் இவ்வாறு பல வழியாகவும் வந்து நமது உடலுக்குள் நுழையத் தயாராகவே உள்ளன. இவைகள் நோய்களை உண்டு பண்ணுகின்றன.

ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் வர விடாமல் தடுக்கும் ஆச்சர்யமான அற்புத சக்தி ஒன்று நம் உடலில் இருக்கிறது.  இதனையே  நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்று சொல்கிறோம்.

எதிர்ப்பு சக்திகள் எத்தனை வகை.

நமது உடலில் இயற்கையான எதிர்ப்பு சக்தி(Inmate Immunity, தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity, உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity) என மூன்று வகை எதிர்ப்பு சக்திகள் உள்ளன.  இந்த மூன்று எதிர்ப்பு சக்திகள் பற்றி அறிந்து கொள்வோம்.

இயற்கையான எதிர்ப்பு சக்தி (Inmate Immunity)

பிறக்கும்பொழுதே நம்முடைய உடலில் இந்த இயற்கையான எதிர்ப்பு சக்தி அமைந்துள்ளது.  மனித உடம்புக்கு தோல்(Skin) ஒரு மிகப்பெரிய தடுப்புச்சுவர் போல் உள்ளது. அதைப் போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளின் உள்ளே இருக்கின்ற சவ்வுகளும் நம்மைப் பாதுகாக்கின்ற தடுப்புக் கவசம் போல் செயல்படுகின்றன. இந்த கவசங்கள் நோய் கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்கக் கூடியவைகளாகும்.  அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்று கிருமிகளை அழிக்கக் கூடியவை வெள்ளை அணுக்கள்( Neutrophils, Bosophils, Eosinophils) ஆகும்.  இது உறங்காத போர் வீரனைப்போல் நம் உடலுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.  இவை அனைத்தும் நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும்

தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி(Adaptive Immunity)

இரண்டாவது வகையான தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காத்துக் கொள்வதற்காகவும், தாக்கும் நோய்களுக்கு காரணமான ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்கு தகுந்தவாறும் வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்குகின்றன. Lymphocytes என்ற இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியில் பெரும் பங்கு வகிக்கிறது.

உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி(Passive Immunity)

மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படுகிறபொழுது, மற்றொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல் ஆகும். உதாரணமாக தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாக கிடைக்கிறது.  மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டானஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்கின்றன.

எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது?

நோய்க் கிருமிகள் நுழையும்பொழுது, அதனை எதிர்த்து போரிடுவதற்கான நுட்பமான கட்டமைப்பு நமது உடலில் செயல்படுகிறது.  இந்த செயல்பாட்டின் போது, உயிரணுக்கள், திசுக்கள், நுண்ணுயிரிகள் எல்லாம் சகஜமான ஒத்துழைப்போடு வேகமாக செயல்படுகின்றன.  நாளமில்லா சுரப்பிகள், மண்ணீரல், எலும்புகளின் அடியில் உள்ள மஜ்ஜை ஆகிய உறுப்புகள் இந்த செயல்பாட்டில் பெரும் பங்கு வகிக்கின்றன.  இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது. வெவ்வேறு வகையான வேதிப் பொருள்களும், சுரப்பிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உதவியாக இருக்கின்றன. இவை இரத்தம் மற்றும் நிணநீர் வழியாக பயணம் செய்து நோய்க்குக் காரணமான கிருமிகளை அழிக்கச் செய்கின்றன.

நமது உடலில் உள்ள நோய்எதிர்ப்பு சக்தி 24 மணி நேரமும் செயல்படுகிறது.  அதன் பெரும்பாலான செயல்பாடுகள் நம்மை அறியாமலேயே நிகழ்கின்றன.  சில சமயங்களில் நோய்க் கிருமிகளை எதிர்க்க முடியாமல், எதிர்ப்பு சக்தி தோல்வி அடையும் பொழுதுதான் அதன் அறிகுறிகள் நமக்கு தெரிய வருகின்றன.  நோயை எதிர்த்து நம் உடல் போராடுகிறது என்பதற்கான அடையாளங்கள் காய்ச்சல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் ஆகும்.  அப்போது ஏற்படும் அதிகபட்ச உஷ்ண நிலை தான் காய்ச்சலாக உணரப்படுகிறது.  கிருமிகள் சளியின் வழியாக வெளியேற்றப்படுகிறது.

புண், கட்டி, ரணம் போன்றவை ஏற்படும் பொழுது, அந்த பகுதியில் வியாதியை எதிர்ப்பதற்கான செல்கள் அதிக அளவில் வந்து குவிகின்றன. இவை, அந்த புண்ணின் வழியாக கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கின்றன.

வெள்ளை அணுக்களில்(Neutrophils, Bosophils, Eosinophils) ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடுகின்றன.

நோய்த் தொற்று எப்போது ஏற்படுகிறது?

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைகின்றபோது நோய்க்கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன.  ஊட்டச் சத்து குறைவினாலும் நோய்த் தொற்றுகள் ஏற்படுகின்றன.

நமது உடலில்நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு காரணங்கள் அதிகம் உள்ளன.  அவற்றில் சில.

  1. பலஹீனமான உடலமைப்பு
  2. மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள்.
  3. அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது.
  4. மது. போதைப் பொருள் பழக்கம்.
  5. புகை பிடிக்கும் பழக்கம்.
  6. தூக்கமின்மை.
  7. சர்க்கரை நோய்

இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது.  நோய் எதிர்ப்பாற்றல் இல்லாமல் செய்கிறது.

நோய் தொற்றைத் தவிர்க்க

சாக்கடை, கழிவு நீர் தேங்குதல், சாலையோரத்தில் கொட்டப்டும் காய்கறி மற்றும் வீட்டு உபயோக கழிவுகள் ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய்க்கிருமிகள் உருவாகின்றன.  இந்த நோய்க்கிருமிகள்தான் நம்மைத் தாக்குகின்றன.  அதனால் நாம் நமது இடத்தை சுத்தமாக சுகாதாரமாக வைத்துக் கொள்ள வெண்டும். அப்பொழுதுதான் நோய்த்தொற்று வராது.

கை குலுக்கல், தொலைபேசி உபயோகித்தல், கதவின் கைப்பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுவது இவற்றின் மூலமும் கிருமிகள் தொற்ற வாய்ப்பு உள்ளது. இந்த ஒவ்வொரு செயல்பாட்டிற்குப் பின்னரும் கைகளை சோப்பு அல்லது சுடுநீர் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும்.

கையுறைகள் போன்றவற்றை அணியும் முன் அவை முறையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதோ என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவா்கள் அதனை தவிர்க்க வேண்டும்.  அது உங்களை மட்டுமின்றி உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும்.

மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்.  நெகிழ்வாகவும், மகிழச்சியுடனும் இருக்க பழக வேண்டும்.  தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.  இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க.

பால், தயிர், நெய், சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  முட்டையின் வெள்ளைக் கரு, மீன் இவற்றை வாரத்தில் மூன்று முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.  இவற்றில் Anti oxidants அதிகம் உள்ளது.

கடலை, சூரியகாந்தி விதைகள் போன்றவை துத்தநாகம் கால்சியம் பொன்ற எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான சத்துக்களை அதிகரிக்க உதவுகின்றது.

வேதிப் பொருட்கள் (Chemicals) பூச்சி மருந்துகள் (Pesticides) போன்றவை படிந்த பொருட்கள், மற்றும் வண்மை பூசப்பட்ட பொருட்கள், பதப்படுத்த டின் பொருட்கள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

எண்ணெயில் வறுத்த உணவுப் பண்டங்களை சாப்பிடக்கூடாது.  அவை உடலில் நச்சுத் தன்மையை (Free radicals) உண்டாக்குகிறது.

சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.  சர்க்கரையில் அளவு அதிகமானால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை 15 மணி நேரத்திற்குள் குறைத்து விடுகிறது.

காபி, டீ போன்றவற்றை அளவுக்கு அதிகமாக குடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அடிக்கடி காய்ச்சல், சளிபோன்ற அவஸ்தைகள் வரும்பொழுது உடனே டாக்டரை அணுகி உடலை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.  மருத்துவ பரிசோதனை மூலம் உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவர் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது. நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு            (Balance diet) உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு( Healthy life style) வாழ்வதாகும்.

Leave a Reply

Your email address will not be published.